2. இருப்பதைவிட இறப்பது நன்று

வாணிகர்க்கும் தமிழென்றால்
வெறுப்புண்டோ? அரசியல்சீர்
வாயக்கப் பெற்றோர்

ஆணிகர்த்த பேடிகளோ?
அரும்புலவர் ஊமைகளோ?
இல்லறத்தைப்

பேணுமற்ற யாவருமே
உணர்வற்றுப் போனாரோ?
பெருவாழ் வுக்கோர்

ஏணிபெற்றும் ஏறாத
தமிழர் உயிர் வாழ்வதிலும்
இறத்தல் நன்றே,


மிகுகோயில் அறத்தலைவர்,
அறநிலையக் காப்பாளர்,
விழாவெ டுப்போர்,

தகுமாறு மணம்புரிவோர்,
கல்விதரும் கணக்காயர்
தம்மா ணாக்கர்,
நகுமாறு நந்தமிழை
நலிவுசெய்யும் தீயர்களோ?
நல்வாழ் வுக்கோர்
புகுமாறு புறக்கணித்தும்
தமிழர் உயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே

மகிழ்ச்சிசெய வருங்கூத்தர்
மாத்தமிழை மாய்ப்பதுண்டோ?
வாய்ப்பாட் டாளர்,
இகழ்ச்சியுற நடப்பதுண்டோ?
இசைப்பாடல் ஆக்குபவர்
இழிவேன் ஏற்றார்?

நகச்சிலசொற் பொழிவாளர்
நாணற்றுப் போயினரோ?
வாழ்வுக்கான

புகழ்ச்சியினைப் போக்கடித்தும்
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே,

கூற்றமென வாழ்வதுவோ
தமிழுக்கே ஏடெழுதும்
கூட்டம்? தீமை

மாற்றவரும் அச்சகத்தார்
வகைமறந்து போனாரோ?
சொல்லக் கத்தார்
தூற்றுமொழி ஏன் சுமந்தார்?
துண்டறிக்கை யாளருமோ
தீயர்? வாழ்வில்

ஏற்றமுற எண்ணாத
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே

நல்லஅரும் பொருளுடையார்
நந்தமிழ்க்கோ பகையாவார்?
நாட்டில் ஆணை

சொல்லவரும் அரசியலார்
செந்தமிழ்நா டிதுவென்றும்
தெரியார் போலும்!

வல்லவரும் பெரிய நிலை
வாய்த்தவரும் என் செய்தார்?
இன்ப வாழ்வின்
எல்லையறிந் தும்திருந்தாத்
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.